ஜப்பானில் திங்கட்கிழமை, பொது இடமொன்றில் கத்தியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் ஒருவர் ஜப்பானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வாள் மற்றும் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மினாடோ-கு பகுதியில் உள்ள ஷினகாவா நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஒரு உணவகத்தின் வெளியே, குறித்த நபர் தனது கழுத்தில் கத்தியை அழுத்திக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது, அவரின் கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் இரத்தப்போக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் மயக்கமடையவில்லை என கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற ஜப்பானிய பொலிஸார் அந்தப் பகுதியை பாதுகாப்பு வலயமாக்கி, அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி, கத்தியை கீழே வைக்குமாறு அறிவுறுத்தியதையடுத்து அவரை கைது செய்தனர்.