பங்களாதேஷில் அரசியல் படுகொலை – தேசியவாத கட்சி உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் பலி

 


பங்களாதேஷில் தேசியவாத கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் அந்நாட்டின் அரசியல் சூழலில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி பங்களாதேஷில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தொடர்ச்சியாக இடம்பெறும் கொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு நிலைமை கடுமையடைந்து வருகிறது.

கடந்த டிசம்பர் 18ஆம் திகதி, பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னர், அரசியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பின்னணியில், தேசியவாத கட்சியின் செயற்பாட்டாளரான அஷிசூர் ரஹ்மான் முஷாபிர் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம், நாட்டில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்கா நகரின் கர்வான் பகுதியில் நேற்று முன்தினம் (6) இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில், முஷாபிர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் தப்பியோடிய சந்தேக நபர்களை தேடி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை