19 வயதிற்குட்பட்டோர் ஆசியக் கிண்ணம்: நேபாளத்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!

 


ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை இளையோர் அணி தமது முதல் ஆட்டத்தில் நேபாள அணியை வீழ்த்தி வெற்றி ஈட்டியது.

போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை இளையோர் அணியினர் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர். இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள இளையோர் அணி, 28.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 82 ஓட்டங்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் ஜொலித்த செத்மிக செனவிரட்ன ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதனையடுத்து, 83 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி, 14.5 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கைத் தாண்டி வெற்றியீட்டியது.

போட்டியின் சிறந்த வீரராக செத்மிக செனவிரட்ன தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், இலங்கை இளையோர் அணி 19 வயதிற்குட்பட்ட ஆசிய இளையோர் கிண்ணத் தொடரை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

புதியது பழையவை