இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

 


மூன்றாவது 'டி-20' போட்டியில் பவுலர்கள் பட்டையை கிளப்ப, இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது போட்டி இமயமலை தொடரின் தர்மசாலாவில் உள்ள, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது.

பும்ரா சந்தேகம்: தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா அவசரமாக ஆமதாபாத் சென்றார். இவர் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. அக்சர் படேலுக்கு உடல்நிலை சரியில்லை. இவர்களுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் இடம் பெற்றனர். கடந்த போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்க அணியில் தேவையில்லாமல் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. மில்லர், லிண்டே, சிபம்லா நீக்கப்பட்டு, பாஷ், நோர்க்கியா, ஸ்டப்ஸ் வாய்ப்பு பெற்றனர். 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் சாமர்த்தியமாக 'பவுலிங்' தேர்வு செய்தார்.

சபாஷ் அர்ஷ்தீப்: துவக்கத்தில் இந்திய 'வேகங்கள்' மிரட்டினர். அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரில் ஹெண்ட்ரிக்ஸ் (0) அவுட்டானார். ஹர்ஷித் ராணாவின் அடுத்த ஓவரில் குயின்டன் (1) நடையை கட்டினார். தொடர்ந்து அசத்திய ஹர்ஷித் 'வேகத்தில்' பிரவிஸ் (2) போல்டாக, தென் ஆப்ரிக்கா 3.1 ஓவரில் 7/3 ரன் எடுத்து தத்தளித்தது. விக்கெட் மடமடவென சரிந்ததால், 17வது பந்தில் தான் முதல் பவுண்டரியை அடித்தது. ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஸ்டப்ஸ் (9) வெளியேற, 7 ஓவரில் 30/4 என நிலைமை மோசமானது. 10 ஓவரில் 44/4 ரன் எடுத்து தவித்தது.

மார்க்ரம் அரைசதம்: பின் ஷிவம் துபே வீசிய முதல் பந்திலேயே பாஷ் (4) அவுட்டானார். வருண் சக்ரவர்த்தி 'சுழலில்' பெரேரா (20), யான்சென் (2) சிக்கினர். தனிநபராக போராடிய கேப்டன் மார்க்ரம், ஹர்ஷித் ராணா ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி அரைசதம் கடந்தார். மீண்டும் பந்துவீச வந்த அர்ஷ்தீப் இம்முறை மார்க்ரமை (61, 6x4, 2x6) அவுட்டாக்கினார். குல்தீப் வலையில் 'டெயிலெண்டர்கள்' வெளியேறினர். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 117 ரன்னுக்கு சுருண்டது.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப், ஹர்ஷித், வருண், குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அபிஷேக் 'சிக்சர்': சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சுப்மன் கில், அபிஷேக் சர்மா 'சூப்பர்' துவக்கம் தந்தனர். இருவரும் சேர்ந்து தென் ஆப்ரிக்க பந்துவீச்சை சிதறடித்தனர். நிகிடி வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பினார் அபிஷேக். முதல் விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த நிலையில், அபிஷேக் (35) அவுட்டானார். சுப்மன், 28 ரன் எடுத்தார். நிகிடி ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த சூர்யகுமார், 12 ரன்னில் வெளியேறினார். பார்ட்மென் ஓவரில் தொடர்ந்து ஒரு சிக்சர், பவுண்டரி விளாசிய ஷிவம் துபே விரைவான வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணி 15.5 ஓவரில் 120/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. திலக் வர்மா (26), துபே (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காவது போட்டி, டிச. 17ல் லக்னோவில் நடக்க உள்ளது.

புதியது பழையவை