வங்கதேசத்தில் இன்னொரு மாணவர் தலைவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அந்நாட்டில் கடும் பதற்ற நிலை நிலவி வருகிறது.
வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த 18ஆம் திகதி அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளிவந்ததுடன், வங்கதேசத்தின் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து, மைமென்சிங் நகரில் ஹிந்து இளைஞரான திபு சந்திர தாஸ் என்பவரை ஒரு குழுவினர் கொடூரமாக தாக்கி உயிரிழக்கச் செய்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அவரது உடலை மரத்தில் கட்டி தீயிட்டு எரித்த சம்பவமும் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேலும் ஒரு மாணவர் தலைவர் தலையில் சுடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தில் காயமடைந்தவர் வங்கதேச தேசிய குடிமக்கள் கட்சியின் குல்னா மண்டலத் தலைவர் மொடலெப் சிக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தலையில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அபாய நிலையை அவர் தாண்டியிருந்தாலும், தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களால் வங்கதேசம் முழுவதும் பதற்றம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
