அனர்த்த கால உதவிகள் மக்களைச் சென்றடைவதை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி

 


அனர்த்த காலத்தில் வழங்கப்படும் உதவிகள் மக்களைச் சென்றடைவதை அரச உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் அலைக்கழிக்கப்படக் கூடாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி வலியுறுத்தினார்.

கரவெட்டிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

உயர் அதிகாரிகளின் பொறுப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்:

  • அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குகிறது. ஆனால், அவற்றை உரிய மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அரச அதிகாரிகள் சாக்குப்போக்குகள் கூறி வருகின்றனர்.

  • அவர்கள் நேரில் சென்று பார்க்காமல் விவரங்களை மட்டும் பதிவிட்டுள்ளனர். அனர்த்தம் நிகழ்ந்த நேரத்தில்கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லாமல் இருந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட அனைத்து உதவிகளும் சென்றடைய வேண்டும். அரச உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். உயர் அதிகாரிகள் இதனைக் கண்காணிக்க வேண்டும்.

நிலமைகள் அவதானிக்கப்படாமை

  • நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் பல இழப்புகளையும் துன்பங்களையும் சந்தித்துள்ளனர். அத்தகைய மக்களை மீண்டும் மீண்டும் துன்பத்திற்குள் வைத்திருக்க முடியாது.

  • இந்தச் சூழலில், அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முடிந்தளவு உதவிகளை வழங்க முன்வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

  • குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பது தொடர்பாக சுற்று நிருபமும் வெளியிட்டுள்ளது.

  • யாழ் மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. மக்கள் மத்தியில் செயற்படுகின்ற அரச உத்தியோகத்தர்கள் நேரில் சென்று நிலைமைகளை அவதானிக்காமையே இதற்குக் காரணம்.

  • வழமையாக அனர்த்தம் நிகழ்ந்தால் ஒரு விவரப் பட்டியலை வைத்திருப்பது போல், சில விவரங்களை மட்டும் வைத்துப் பாதிக்கப்பட்ட நபர்கள் என அடையாளம் காட்டியுள்ளார்கள்.

கடமைத்தவறிய உத்தியோகத்தர்கள்

  • மக்கள் பிரதிநிதியாகச் செயற்படும் நான் நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடும்போதுதான், அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு மக்களுடன் கலந்துரையாடுகிறார்கள், நேரில் விஜயம் செய்தார்களா மற்றும் எத்தகைய மனநிலையில் வேலை செய்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடிந்தது.

  • அரசாங்கம் செய்கின்ற உதவிகளை மக்களுக்கு முறையாக வழங்குவதற்கு வழிசெய்ய முடியவில்லை என்றால், அரச உத்தியோகத்தர்களின் மனநிலை எத்தகையது? இதில் யாரைக் குறை சொல்வது?

  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் செய்கின்ற உதவிகள் முழுமையாகச் சென்றடைய வேண்டும்.

  • கிராம மட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். அதனைக் கண்காணிக்கும் பொறுப்பு உயர் அதிகாரிகளுக்கு உண்டு.

  • "கரவெட்டிப் பிரதேச செயலர் பிரிவில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, ஏனைய பிரதேசங்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்? மக்களுக்கான உதவிகள் அவர்களுக்குச் சென்றடைய வேண்டும். அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கு ஏற்ப, காலதாமதமின்றி அவை சென்றடைய வேண்டும்" என்றார்.

புதியது பழையவை