1949-ஆம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தாய்வான் பிரிந்து தனி நாடாகச் சென்றது. ஆனால், தாய்வான் தீவு இன்னமும் தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தேவைப்பட்டால், அதைத் தங்களுடன் இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
தாய்வான் விவகாரத்தில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தலையிடுவதையும் சீனா வலுவாக எதிர்க்கிறது. ஆனால், தாய்வான் நாடு இதை மறுக்கிறது. தங்களுக்குத் தனி இறையாண்மை உண்டு என்றும், தாங்கள் ஒரு தனி நாடு என்றும் தாய்வான் தொடர்ந்து கூறி வருகிறது.
இதற்கிடையில், தாய்வான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தை உருவாக்கி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் 11 போர்க்கப்பல்கள் மற்றும் 7 விமானங்கள் தாய்வான் எல்லையைச் சுற்றி வளைத்தன.
சீனாவின் இந்த அத்துமீறல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், "மக்களின் அமைதிக்கு இடையூறு ஏற்பட்டால், அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்றும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.