கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள புஸல்லாவை நகரில், மண்சரிவு அபாயம் காரணமாக இன்று (19) ஏழு வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருந்த நபர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையங்களின் அருகே நிலத்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்புகளை அடுத்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அபாய நிலை குறித்து புஸல்லாவை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்களையும் விழிப்புணர்வையும் வழங்கினர்.
சீரற்ற காலநிலை தாக்கம் காரணமாக, புஸல்லாவை நகரத்திற்கு அண்மையில் உள்ள சென்குவாரி தோட்டத்தின் மேற்பகுதியில் நில வெடிப்புகள் உருவாகி, மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், புஸல்லாவை நகரத்திற்கு கீழ்பகுதியில் அமைந்துள்ள புஸல்லாவை பல்லேகம பிரிவிலும் இதேபோன்ற நில வெடிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை சீர்செய்யும் பணிகளில் பிரதேச மக்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
