துபாயில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றம் காரணமாக, கனமழை மற்றும் மின்னல் தாக்கத்தால் எமிரேட்ஸ் விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் சிரமப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த சில நாட்களாக துபாயில் வழக்கத்திற்கு மாறான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆலங்கட்டி மழையுடன் கனமழை பெய்ததுடன், இடியுடன் கூடிய மின்னலும் ஏற்பட்டது. இந்த அசாதாரண வானிலை அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.
வானிலை மிகவும் மோசமாக இருந்த நேரத்தில், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக எமிரேட்ஸ் விமானம் ஒன்று தாழ்வாக பறந்து வந்தது. அந்தச் சமயத்தில் திடீரென கனமழையுடன் மின்னல் தோன்றி மறைந்தது. ஆபத்தான இந்த சூழ்நிலையை திறமையாக கையாள்ந்த விமானி, விமானத்தை தரையிறங்க விடாமல் மீண்டும் மேலே உயரப் பறக்கச் செய்து நிலைமையை பாதுகாப்பாக சமாளித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
முதலில் சிலரின் கவனத்தை பெற்ற இந்த வீடியோ, பின்னர் பலரால் பாராட்டப்பட்டது. குறிப்பாக, விமானத்தை பாதுகாப்பாக இயக்கிய விமானியின் திறமைக்கு சமூக ஊடக பயனர்கள் பெரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதேவேளை, மோசமான வானிலை காரணமாக எமிரேட்ஸ் மற்றும் பிளைதுபாய் விமான நிறுவனங்கள் தங்களின் சில விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன. பயணிகள் விமான நிலையம் செல்லும் முன் தங்களது விமான சேவை நிலையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளுமாறும் விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
