இயற்கை அனர்த்தத்தால் குடிநீர் விநியோக அமைப்புகளுக்கு ஏற்பட்ட பேரழிவு


 திட்வா புயல் பேரழிவின் விளைவாக, குடிநீர் விநியோக அமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்புச் சுமார் 5 பில்லியன் ரூபாயாக இருக்கலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) மதிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 342 குடிநீர் விநியோக அமைப்புகளில், 156 அமைப்புகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பல மாவட்டங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சீரமைக்கப்பட்ட நீர் வழங்கல் அமைப்புகள்

பேரழிவால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள 147 நீர் வழங்கல் அமைப்புகள் இதுவரை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

அனுராதபுரம், மன்னார், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, வவுனியா போன்ற மாவட்டங்களில் எஞ்சிய 7 நீர் வழங்கல் அமைப்புகளும் இயல்பு நிலைக்கு மீட்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நீர் விநியோகத்தை மீட்டெடுக்க நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை மற்றும் வில்கமுவ கடற்படை குழுக்கள் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

நிலச்சரிவால் ஏற்பட்ட அனர்த்தம்

நிலச்சரிவுகள் காரணமாக குழாய்கள் மற்றும் அணுகல் சாலைகள் அடைப்பு, வெள்ள நீர் வடிந்தோடுவதில் தாமதம் மற்றும் குப்பைகள் குவிதல் போன்ற காரணங்களால் நீர் விநியோக முறையை மீட்டெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சபை மேலும் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை