நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை வரும் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டின் மொத்தமுள்ள 10,076 பாடசாலைகளில், 9929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள்
எனினும், அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய 147 பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அவை பின்வருமாறு:
ஊவா மாகாணம்: 26 பாடசாலைகள்
வடமேல் மாகாணம்: 6 பாடசாலைகள்
மத்திய மாகாணம்: 115 பாடசாலைகள்
இந்த 147 பாடசாலைகளும் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது.
ஊழியர்கள் மற்றும் சீருடை நெகிழ்வுத்தன்மை
டிசம்பர் 16ஆம் தேதி ஆரம்பமாகும் அனைத்துப் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்சாரா ஊழியர்கள் டிசம்பர் 15ஆம் திகதி சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும்.
அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை (தளர்வு) பின்பற்றப்படும்.
தவணைக் கால அட்டவணை
2025ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலத்தின் இரண்டாம் கட்டம் பின்வருமாறு நடைபெறும்:
கட்டாய விடுமுறைக்கு முன்: 2025.12.16 ஆம் தேதி முதல் 2025.12.22 ஆம் தேதி வரை
கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு: 2025.12.29 ஆம் தேதி முதல் 2025.12.31 ஆம் தேதி வரை
முஸ்லிம் பாடசாலைகள்: 2026.01.02 ஆம் தேதி மீண்டும் ஆரம்பமாகும்.
பரீட்சை அறிவிப்புகள்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நடாத்தப்படாத ஏனைய பாடங்கள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். இது தொடர்பான மேலதிக அறிவிப்புகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிடுவார்.
2026 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி பெப்ரவரி மாதம் நடைபெறும்.
