தொடரை வென்ற இந்தியா: ஜெய்ஸ்வால், குல்தீப்பின் ஆதிக்கம்!



இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தீர்க்கமான இறுதிப் போட்டியில், இந்தியா மிகவும் இலகுவாக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை தன்வசப்படுத்தியது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 270 ரன்கள் எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 39.5 ஓவர்களில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றிக் கனியைப் பறித்தது.

இந்த வெற்றியின் நாயகனாக, தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் திகழ்ந்தார். அவர் ஆட்டமிழக்காமல் அபாரமாக 116 ரன்கள் குவித்தார். இது அவரது முதல் ஒருநாள் சர்வதேச சதமாகும். இதன்மூலம், மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமைமிகு சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

இப்போட்டியில், மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா 75 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.



யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடர் முழுவதும் சிறப்பான பங்களிப்பை அளித்த விராட் கோலி தொடரின் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருந்ததால், விசாகப்பட்டினத்தில் நடந்த இந்தப் பரபரப்பான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வசப்படுத்தியது இந்திய அணி. ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.


டாஸ் வென்ற இந்திய அணி

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2023 உலகக்கோப்பை தொடரில், நியூசிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடேவில் நடந்த அரையிறுதியில் போட்டியில் இந்தியா டாஸ் வென்றது.

புதியது பழையவை