லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஆகியோரைப் போன்று போலி அடையாள அட்டைகளைத் தயாரித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். நீதிமன்றத்தில் ஆஜரான லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், சந்தேக நபரிடம் தொடர்ந்து உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரை விளக்கமறியலில் வைக்க நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைக் கருத்தில்கொண்ட நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பாணந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர் கடந்த 03 ஆம் திகதி பாணந்துறை நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் வைத்து லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.
