இ.தொ.காவில் இருந்து விலகும் எண்ணம் இல்லை – ஜீவன் தொண்டமான் விளக்கம்

 


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் விலக இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை பாதுகாத்து நிலைநாட்ட, எமது முன்னோர்களின் தியாகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய அரசியல் ஸ்தாபனமாகும்.

அத்தகைய ஸ்தாபனத்தின் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவது தன்னுடைய நோக்கமல்ல என அவர் வலியுறுத்தியுள்ளார்.

காலத்தின் தேவைக்கேற்ப கட்சியின் அமைப்பு முறைகளில் சில மாற்றங்களை மேற்கொள்வது அவசியமாக இருப்பதாகவும், அதனை தவறான விதத்தில் புரிந்து கொண்டு சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை பொருட்படுத்த தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை ஜனநாயக ரீதியாக மேலும் வலுப்படுத்துவதே தமது பிரதான இலக்காக இருப்பதாக தெரிவித்த ஜீவன் தொண்டமான், இதன் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூட்டப்பட்டு, தேவையான மாற்றங்கள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தற்போது கட்சியின் உறுப்பினர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை