வெனிசுவேலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
இந்த சர்வதேச பதற்ற நிலைமையின் தாக்கம் காரணமாக, இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலையில், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக, உள்நாட்டு எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய துல்லியமான தாக்கத்தை கணிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்கனவே மாற்றங்கள் ஏற்பட்டுவருவதை அரசாங்கம் அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உலகச் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய துறைசார் அமைச்சுகள் இணைந்து கலந்துரையாடி உரிய தீர்மானங்களை எடுக்கும் என்றும், எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவுகள் நிலைமையைப் பொறுத்து எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.