இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவு 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (டிசம்பர் 16) கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மாவட்ட வாரியான கொடுப்பனவு நிலை
ஏனைய இழப்பீடுகளை வழங்குவதற்காக அரசு அதிகாரிகள் தற்போது மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களில் கம்பஹா மாவட்டத்தில் 73.4%, அனுராதபுரம் மாவட்டத்தில் 70.05%, இரத்தினபுரி மாவட்டத்தில் 68.39%, மாத்தளை மாவட்டத்தில் 65.28% மற்றும் குருநாகல் மாவட்டத்தில் 61.42% பேருக்கு இதுவரை இழப்பீடுகள் வழங்கப்பட்டு முடிந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
துரிதப்படுத்தும் நடவடிக்கைகள்
சில மாவட்டங்களில் இந்தக் கொடுப்பனவு வழங்கல் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுவதாகவும், இந்த நிலையைத் துரிதப்படுத்த அதிகாரிகள் தற்போது தலையிட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது தொடர்பான சவால்களைக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் அளித்த மேலதிக விளக்கம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த அனர்த்தத்தினால் சுமார் 22 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். இப்போது அரசு அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் குறித்து மதிப்பீடு செய்து வழங்கி வருகின்றனர்.
இந்த 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கல், நேற்று வரையான நிலவரப்படி 50 சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இது மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடலாம். சில மாவட்டங்களில் இது இன்னும் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.