அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டனைச் சேர்ந்த பிபிசி (BBC) நிறுவனத்திற்கு எதிராக 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு முன்பாக, வாஷிங்டனில் ஆதரவாளர்களிடம் ஆற்றிய அவரது உரையை தவறாகத் தொகுத்து ஒளிபரப்பியதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ட்ரம்பின் குற்றச்சாட்டு
பிபிசியின் 'பனோரமா' (Panorama) நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த உரைத் தொகுப்பானது, “திட்டமிட்ட, தீய நோக்கம் கொண்ட மற்றும் ஏமாற்றும் வகையில்” திருத்தப்பட்டதாக ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த வழக்கு திங்கட்கிழமை இரவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில், அவதூறு செய்தமைக்காக மற்றும் புளோரிடா மாநிலத்தின் 'ஏமாற்றும் மற்றும் அநியாய வர்த்தக நடைமுறைகள் சட்டத்தை' மீறியதற்காக எனத் தலா 5 பில்லியன் டொலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
வழக்கில் உள்ள முக்கிய அம்சம்
'பனோரமா' நிகழ்ச்சியில், ட்ரம்பின் உரையின் ஒரு மணி நேர இடைவெளியில் பேசப்பட்ட பகுதிகளை இணைத்து, “நாம் கெப்பிட்டல் நோக்கி நடந்து செல்வோம். நானும் உங்களுடன் இருப்பேன். நாம் போராடுவோம். கடுமையாகப் போராடுவோம்” என அவர் கூறியதாக தவறான தோற்றம் ஏற்படுத்தப்பட்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிபிசியின் பதில்
இந்த வழக்கு தொடர்பில் பிபிசி உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அந்த உரைத் தொகுப்பை ஒளிபரப்பியது “தீர்மானத்தில் ஏற்பட்ட தவறு” என ஏற்றுக்கொண்டு ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்டிருந்தது.
ஆனால், இது அவதூறு வழக்காகத் தொடருவதற்குரிய சட்ட அடிப்படை இல்லை என பிபிசி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் விமர்சனம்
இந்த வழக்கின் மூலம் ஊடகங்களுக்கு எதிரான ட்ரம்பின் சட்டப் போராட்டம் சர்வதேச அளவுக்கு விரிவடைந்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.