சமீபத்திய அனர்த்தங்கள் காரணமாக 73 சிறுவர்கள் தமது பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தச் சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்புகள்
பெற்றோரை இழந்தவர்களில் பெரும்பாலானோர் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மாவட்டத்தில் 21 சிறுவர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 20 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோரை இழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதேவேளை, பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 35 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற நிலை மற்றும் மோசடி எச்சரிக்கை
இதற்கிடையில், அனர்த்தம் காரணமாகப் பெற்றோரை இழந்து பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் தரவுகளைத் திரட்டி, அவர்களைக் கடத்தும் சம்பவங்கள் குறித்து காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சமூக ஊடகங்கள் வாயிலாகத் தொலைபேசி இலக்கங்களைப் பதிவிட்டு, சிறுவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து மோசடிகள் இடம்பெறுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறான மோசடியுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
