பெரும் அனர்த்தத்தால் ஏற்பட்ட அழிவில் இருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பொருட்டு அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' எனும் பெயரிலான நிதியம் குறித்து, மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்பிடம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் விரிவாகக் கேட்டறிந்தார்.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுச் சீற்றங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். அத்துடன், இலட்சக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அதேவேளை, இந்தப் பேரழிவினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் விசேட நிதியம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமை (டிசம்பர் 15) மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்பை சந்தித்து பேசிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் தொடர்பில் விவரமாகக் கேட்டறிந்தார்.
அத்தோடு, பேரழிவைத் தொடர்ந்து அமெரிக்கா வழங்கிய 2 மில்லியன் டொலர் பெறுமதியான உடனடி நிவாரண உதவிகள், சி-130ஜே விமானத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துணைகள் என்பன தொடர்பிலும் மேல்மாகாண ஆளுநரிடம் விளக்கம் அளித்ததாக, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் செய்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க நிறுவனங்கள், பரோபகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இலங்கையின் மீட்புக்குத் தேவையான உதவிகள், ஆலோசனைகள் மற்றும் வளங்கள் உட்படப் பல உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
