வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதாக கூறி, போலி ஆவணங்களை தயாரித்து பொதுமக்களை மோசடி செய்த ஐந்து சந்தேகநபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைகள், பொரலஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனைகளின் போது, துபாயில் வேலை வாய்ப்புகளை வழங்க பயன்படுத்தப்பட்ட 10 ஒப்பந்தக் கடிதங்கள், 27 விண்ணப்பப் படிவங்கள், போலி ஆவணங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கணினி, அரச பாடசாலை அதிபர்களுக்குரிய பல போலி முத்திரைகள்,
அரச அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் அடங்கிய படிவங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், போலியாக தயாரிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பாடசாலை விடுகைச் சான்றிதழ்கள் ஆகியவையும் இந்த நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, மேலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
