மேல் மாகாண சபையின் கீழ், கம்பஹா மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளுக்கான மருத்துவ இயந்திரங்களை கொள்வனவு செய்யும் செயல்முறையில் பாரிய அளவிலான முறைகேடுகள் இடம்பெறுகின்றன என கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் வகையில் தொழில்நுட்ப விவரக் குறிப்புகள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் வரிப்பணத்தை தவறான முறையில் பயன்படுத்த தொழில்நுட்ப கொள்முதல் குழு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் திங்கட்கிழமை (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கம்பஹா மாவட்டப் பொது வைத்தியசாலைக்காக ஒரு மெமோகிராம் இயந்திரமும், அவிசாவளை மாவட்டப் பொது வைத்தியசாலைக்காக ஒரு சி.டி. ஸ்கேன் இயந்திரமும் கொள்வனவு செய்ய மேல் மாகாண சபை அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். இதற்காக சுமார் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த இயந்திரங்களின் தரம் மற்றும் தொழில்நுட்பத் துல்லியத்தைக் கண்காணிக்க வேண்டிய தொழில்நுட்பக் குழுவில், தகுதியான கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர்கள் எவரும் இணைக்கப்படவில்லை என்பதும் அவர் சுட்டிக்காட்டினார்.
இக்கொள்முதல் செயல்முறையில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக, அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு விசேட வைத்திய நிபுணரும் ஏற்கனவே அதிலிருந்து விலகியுள்ளதாகவும் அவர் கூறினார். எந்த இயந்திரத்தையும் கொள்வனவு செய்வதற்கு முன், அதன் தரம் தொடர்பான நடுநிலையான மற்றும் தெளிவான தொழில்நுட்ப விவரங்கள் தயாரிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் தற்போதைய குழு, தங்களுக்கு நெருக்கமான சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கும் நோக்கில், அவை வழங்கும் இயந்திரங்களுக்கு ஏற்ற வகையில் விவரக் குறிப்புகளை மாற்றியமைத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இதன் விளைவாக, பொதுமக்களின் பெருமளவு நிதி முறைகேடானவர்களால் வீணடிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார். எனவே, மேல் மாகாண சபையின் இந்த அவசரக் கொள்முதல் நடவடிக்கை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், நோயாளர்களுக்கு துல்லியமான பரிசோதனைகளை உறுதி செய்யத் தகுதியான நிபுணர்களைக் கொண்ட புதிய தொழில்நுட்பக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.