டித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, கம்பளை – துனுகேஉல்ல பிரதான வீதியில் அமைந்துள்ள இஹலகம மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலங்களின் எச்சங்கள் வெளிப்பட்டு வருவதால், அந்தப் பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் சிதைவுகள் சவப்பெட்டிகளுடன் பல நாட்களாக வீதியோரத்தில் கிடப்பதால், அந்தப் பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த 27ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவின் போது, அந்த மயானம் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதி பயன்பாட்டுக்கு அற்ற நிலையில் இருப்பதால், துனுகேஉல்ல பகுதியைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் கிராமத்திற்குள் சிக்கியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி குமாரி என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார். மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சவப்பெட்டிகளுடன் கூடிய உடல்கள் மண்சரிவின் காரணமாக வெளியேறி, தற்போது வீதியில் கிடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இந்த விடயம் தொடர்பில் உடபலத்த பிரதேச செயலாளரிடம் அறிவித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என அவர் கூறினார்.
தற்போது மக்கள் தங்களை முற்றிலும் உதவியற்ற நிலையில் இருப்பதாகவும், அழுகி சேற்றுடன் கலந்துள்ள இந்த சடல எச்சங்கள் தொற்றுநோய்கள் பரவுவதற்கான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என கடும் கவலை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
