2025 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில், இலங்கையின் ஏற்றுமதி துறை வருடாந்த அடிப்படையில் 5.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகளையும், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மேற்கொண்ட மாணிக்க மற்றும் ஆபரணங்கள், பெற்றோலிய உற்பத்திகள் தொடர்பான மதிப்பீடுகளையும் இணைத்துக் கணக்கிடுகையில், மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளதாக, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
2025 நவம்பர் மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளில் இருந்து பெறப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 1,364.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்த அளவு, 2024 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.56 சதவீத வருடாந்த உயர்வாகும்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மங்கள விஜேசிங்க, 2025 ஜனவரி முதல் நவம்பர் வரை இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன், இது வலுவான வருடாந்த வளர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
முக்கிய ஏற்றுமதி சந்தைகள் வழமை நிலைக்குத் திரும்பியமை, தொடர்ச்சியான உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி உத்திகளை திறம்பட நடைமுறைப்படுத்தியமை ஆகியவை இலங்கையின் ஏற்றுமதி துறையின் வலிமையையும் போட்டித் தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன என அவர் கூறினார்.
மேலும், இந்த வளர்ச்சி உலக வர்த்தக அமைப்புடன் இலங்கை அதிகமாக இணைந்து செயல்படுவதை பிரதிபலிப்பதோடு, சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி ஏற்றுமதி போட்டித்தன்மையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் வெற்றியையும் காட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
மாறிவரும் உலக சந்தை சூழலுக்கு ஏற்ப இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் தங்களைச் சீரமைத்துக் கொள்ளும் திறனையும், அவர்களின் நிலைத்தன்மையையும் இந்த முன்னேற்றம் வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
2025 நவம்பர் மாத முடிவில், வருடாந்த ஏற்றுமதி இலக்கில் 86.3 சதவீதத்துக்கும் மேலான அடைவினை எட்டியுள்ளமை, இலங்கையின் ஏற்றுமதி சமூகத்தின் வலிமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் தெளிவான சான்றாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
.jpeg)