அண்மைய அனர்த்தங்களால் சேதமடைந்த ரயில் பாதைகளைப் புனரமைப்புச் செய்வதற்கு சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து ரயில் பாதைகளின் புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்வதற்குச் சற்று கூடுதல் காலம் எடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 236 சுகாதார நிறுவனங்களில் சுமார் 90 சதவீதம் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பதுளை - ஸ்பிரிங்வெலி மற்றும் கந்தேகெதர மருத்துவமனைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மஹியங்கனை மற்றும் சிலாபம் மருத்துவமனைகள் தற்போது வழக்கமான சேவைக்குத் திரும்பியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அனர்த்தங்கள் காரணமாக மருத்துவமனைகளில் உள்ள சி.டி ஸ்கேனர்கள் (CT Scanners) போன்ற பல மருத்துவ உபகரணங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி கவலை தெரிவித்துள்ளார்.