மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெலி பிரதான வைத்தியசாலை (Spring Valley Base Hospital) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வைத்தியசாலை மூடப்பட்டதன் காரணமாக ஸ்பிரிங்வெலி தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஸ்பிரிங்வெலி உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அபாயம் குறித்து ஆய்வு
இது குறித்து பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தனவிடம் வினவியபோது, வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நமுனுகுல மலையில் மண்சரிவு ஏற்படும் அச்சுறுத்தல் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) புவியியலாளர்கள் நடத்திய ஆய்வில் தெளிவாகியுள்ளது என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்காக, அந்தப் பிரதேசத்தில் உள்ள அபயபுர சனசமூக மண்டபத்தில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள் (OPD) ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட செயலாளர் தகவல் தெரிவித்தார்.
அடுத்த கட்ட நடவடிக்கைகள்
வைத்தியசாலையின் அபாய நிலை குறித்து மேலும் ஆழமாக ஆராய்ந்து, வைத்தியசாலையின் ஒரு பகுதியையாவது அதே இடத்தில் தொடர்ந்து இயக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
ஆனால், தற்காலிகமாக வெளிநோயாளர் சிகிச்சை நடைபெறும் இடத்திற்குச் செல்ல முடியாதவாறு வீதி தடைப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
