வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டினை உடைத்து, ரூ. 5 கோடிக்கும் அதிக பெறுமதி வாய்ந்த பிராடோ ஜீப் வண்டி, தங்க நகைகள், பணம், மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு கொள்ளைக் கும்பல் உறுப்பினர்களை அநுராதபுரம் கல்னேவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்னேவ பொலிஸ் பிரிவின் புள்னேவ பகுதியில் வசிக்கும் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த 07ஆம் திகதி இரவு இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
இது குறித்து கல்னேவ பொலிஸ் நிலையத்தில் வர்த்தகர் அளித்த முறைப்பாட்டை அடுத்து, தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வந்த குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் (14) குருநாகல் மாவத்தகம மற்றும் வில்கமுவ பகுதிகளில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 10 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின், 10 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 கையுறை, 4 கூர்மையான கத்தி, மற்றும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், வேன், லொறி ஆகிய வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல்
கைது செய்யப்பட்டவர்கள் 34, 36, 38, 40, 43, 48 வயதுடையவர்கள். இவர்கள் குருநாகல், நுககொள்ள, மாவத்தகம, மெல்சிறிபுர மற்றும் கண்டி பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் கொள்ளையடித்த ஜீப் வண்டியை மீகலாவ பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ள நிலையில் பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.
மேலும், கொள்ளையடித்த பணத்தில் ரூ. 59 இலட்சத்து 39,000 மற்றும் கொள்ளையடித்த பணத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் என்பவற்றையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
மாத்தளை லக்கல பகுதியிலும் இவர்கள் பெரும் கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
சந்தேகநபர்கள் நேற்று (15) கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவிற்கு இணங்க, இம்மாதம் 18 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் கல்னேவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரொஹான் முனசிங்க மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
