ஜப்பானின் கன்மா மாகாணத்தில் அமைந்துள்ள மினகாமி பகுதியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற தொடர் விபத்தில், சுமார் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் புத்தாண்டு விடுமுறை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், போக்குவரத்து அதிகரித்திருந்த வேளையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதே விபத்துக்குக் காரணமாக அமைந்ததாகவும், அதன் பின்னர் தொடர்ச்சியாக பல வாகனங்கள் மோதிக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் டோக்கியோவைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
விபத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தால் பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஜப்பான் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
