இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலீசாரின் வாகனத்தை இலக்காகக் கொண்டு மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 5 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
விவரங்கள் வருமாறு:
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அமைந்துள்ள கராக் மாவட்டத்தில், தனியார் எரிசக்தி நிறுவனத்தின் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அந்த வேளையில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், போலீசார் பயணித்த வாகனத்தின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சரமாரி தாக்குதலில் 5 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குப் பின்னர், குறித்த வாகனத்திற்கும் தீவைத்து, தாக்குதலாளர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் என்பது இதுவரை உறுதியாகத் தெரியாத நிலையில், எந்த அமைப்பும் அல்லது இயக்கமும் இதற்கான பொறுப்பை ஏற்கவில்லை.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கடந்த டிசம்பர் 3ஆம் திகதி டெரா இஸ்மாயில் பகுதியில் இதேபோன்ற போலீஸ் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.
