தாய்லாந்து மேற்கொண்டு வரும் இராணுவ தாக்குதல்களினால், கம்போடியா எல்லைப் பகுதியில் வசித்து வந்த சுமார் 5 இலட்சம் பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளதாக கம்போடியா அரசு அறிவித்துள்ளது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையில் பல ஆண்டுகளாக எல்லைத் தகராறு நீடித்து வருகின்றது. இந்தப் பின்னணியில் கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த அந்த மோதலில் இரு தரப்பிலும் மொத்தமாக 43 பேர் உயிரிழந்தனர். பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோரின் தலையீட்டின் மூலம், அக்டோபர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், கடந்த டிசம்பர் 7ஆம் திகதி இடம்பெற்ற மோதலில் தாய்லாந்து இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. கம்போடியா எல்லையை ஒட்டிய பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்காகக் கொண்டு தாய்லாந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்தக் கடுமையான சூழ்நிலையில், மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் தலைமையில், மலேசியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, தாய்லாந்து தாக்குதல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில், கம்போடியா எல்லைப் பகுதியில் வசித்து வந்த சுமார் 5 இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
