ஜனாதிபதி நிதியத்தின் அனுசரணையில், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா நிதி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில், நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை கௌரவிக்கும் இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சித் தொடர் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில், மாவட்ட மட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வட மாகாண நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (21) முற்பகல் கிளிநொச்சி நெலும் பியச வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 274 உயர்தர மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா 100,000 ரூபா ஊக்கத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியம் மொத்தமாக 27.4 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
மாகாண அளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது. இதன் மூலம், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தால் பாராட்டப்பட்டுள்ளனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாடுகளைத் தாண்டி, நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மாணவர்களுக்கும் சமமான தரமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மக்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஜனாதிபதி நிதியம், பொதுமக்களிடம் மேலும் நெருக்கமாக சென்று, நாட்டின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக வழங்கிய பங்களிப்புகளை அவர் பாராட்டினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர், உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டம் யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இன்று அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி நிதியம் என்பது மக்களுக்குரிய நிதியம் என்பதையும், தற்போதைய அரசாங்கம் அதை மக்கள் நலனுக்காக நேரடியாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வட மாகாணத்தை, குறிப்பாக யாழ் மாவட்டத்தை கல்வியின் மையமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அவர், ஆசிரியர் நியமனம், இடமாற்றம் மற்றும் அதிகாரிகள் நியமனம் போன்ற விடயங்களில் அனைத்து மாவட்டங்களையும் சமமாகக் கருதி செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.
மேலும், இம்மாணவர்கள் எதிர்காலத்தில் பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்து, மீண்டும் வட மாகாணத்தின் வளர்ச்சிக்காக சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் பிரதமர் வெளியிட்டார். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், வட மாகாணத்தின் எதிர்கால முடிவுகளை எடுக்கும் பொறுப்புகள் இவர்களிடமே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
மேலும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் கே. இளங்குமரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

