கேப்டன் டாம் லதாம் மற்றும் டெவான் கான்வே ஆகியோரின் அபார சதங்களால், நியூசிலாந்து அணி போட்டியில் உறுதியான முன்னிலை பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணி 1–0 என முன்னிலை வகிக்கிறது. தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுன்கனுயில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் ஜேக்கப் டபி வேகமான பந்துவீச்சில் ஆண்டர்சன் பிலிப் (17), ஷாய் ஹோப் (4) ஆகியோரை வெளியேற்றினார். தொடர்ந்து ஜெய்டன் சீல்ஸ் (15), கீமர் ரோச் (0) ஆகியோரும் விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 420 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கான்வே மீண்டும் அசத்தல்
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு, கேப்டன் டாம் லதாம் மற்றும் டெவான் கான்வே சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். கான்வே, இந்த இன்னிங்சிலும் சதம் விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். முன்னதாக முதல் இன்னிங்சில் அவர் இரட்டை சதம் பதிவு செய்திருந்தார்.
முதல் விக்கெட்டுக்காக இருவரும் 192 ரன்கள் சேர்த்த நிலையில், கவேம் ஹாட்ஜ் வீசிய பந்தில் கான்வே 100 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிலைத்து நின்ற லதாம், 101 ரன்கள் எடுத்து தன் சதத்தை நிறைவேற்றினார்.
நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 306/2 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. வில்லியம்சன் (40), ரச்சின் ரவிந்திரா (46) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கவேம் ஹாட்ஜ் 2 விக்கெட் கைப்பற்றினார்.
கடின இலக்கு: பின், 462 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆட்டநேர முடிவில் 43/0 ரன் எடுத்து, 419 ரன் பின்தங்கி இருந்தது. கேம்பெல் (2), பிரண்டன் கிங் (37) அவுட்டாகாமல் இருந்தனர். கடைசி நாளான இன்று பவுலர்கள் அசத்தினால் நியூசிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றலாம்.
முதல் வீரர்
டெஸ்ட் அரங்கில், ஒரே போட்டியில் இரட்டை சதம், சதம் விளாசிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தார் கான்வே. சர்வதேச அளவில் இம்மைல்கல்லை எட்டிய 10வது வீரரானார். ஏற்கனவே இந்தியாவின் கவாஸ்கர் (1971, எதிர்: வெ.இ.,), சுப்மன் கில் (2025, எதிர்: இங்கி.,), இங்கிலாந்தின் கிரஹாம் கூச் (1990, எதிர்: இந்தியா), வெஸ்ட் இண்டீசின் லாரா (2001, எதிர்: இலங்கை), இலங்கையின் சங்ககரா (2014, எதிர்: வங்கம்), ஆஸ்திரேலியாவின் லபுசேன் (2022, எதிர்: வெ.இ.,) உள்ளிட்டோர் இப்படி சாதித்தனர்.
