மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக முன்வைக்கப்பட்டுள்ள ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
கிராமப்புறங்களில் வறுமையை குறைத்து, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் 2005ஆம் ஆண்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2008ஆம் ஆண்டு இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் மூலம், ஆண்டுக்கு வழங்கப்படும் வேலை நாட்கள் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான நிதிப் பங்கீடு 60:40 என்ற விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம், ‘விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்’ என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முழுப் பெயரான ‘விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் – கிராமின்’ என்பதன் சுருக்கமாகவே ‘வி.பி., ஜி ராம் ஜி’ என அழைக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு மசோதாவிற்கு அதிகாரபூர்வ அனுமதி வழங்கியுள்ளார்.