யாழில் பயங்கர விபத்து: இளைஞர் இடத்திலேயே உயிரிழப்பு

 யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கடுமையான போக்குவரத்து விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய் மற்றும் மகன் அடங்கிய குடும்பத்தினருடன், எதிர்திசையில் அதிவேகமாக வந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதலின் தொடர்ச்சியாக, அதே பாதையில் வந்த கார் ஒன்றும் விபத்தில் சிக்கியுள்ளது. சம்பவத்தில், வேகமாக பயணித்த இளைஞர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில், புத்தூர் மணற்பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் உயிரிழந்துள்ளார். மேலும், மற்றொரு இளைஞரின் உடல்நிலை கவலைக்கிடமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மற்றுமொரு புறம், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத்தினர் மூவரும் சிறிய காயங்களுடன் தப்பியதாகவும், அவர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை