யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், 69 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில், கொடிகாமம் மத்தி பகுதியைச் சேர்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கெற்போலி மற்றும் கச்சாய் பகுதிகளைச் சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் கச்சாய் ஆரம்ப வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 34 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேர் உறவினர்களின் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளத்தால் கொடிகாமம் மத்தி பகுதியில் 10 வீடுகளும், நாவற்குழி பகுதியில் ஒரு வீடுமாக மொத்தம் 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுகளை பிரதேச செயலகம் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
