ஈரான் அணு திட்டத்தை மீண்டும் தொடங்கினால் கடும் தாக்குதல் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை

 


வாஷிங்டன்: ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சித்தால், அதை முற்றாக அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள தனது இல்லத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அதிபர் டிரம்ப் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டார். இதன்போது, ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அதிபர் டிரம்ப், கடந்த ஜூன் மாதம் ஈரானின் முக்கிய அணு செறிவூட்டல் தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால், ஈரானின் அணுசக்தி திறன் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக கூறினார்.

தற்போது ஈரான் மீண்டும் அந்த திட்டத்தை கட்டமைக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், அப்படி அவர்கள் முயற்சி மேற்கொண்டால், அமெரிக்கா அதை கடுமையாகத் தடுத்து நிறுத்தும் என்றும், அந்த அணு திட்டம் முற்றிலுமாக அழிக்கப்படும் என்றும் எச்சரித்தார். இருப்பினும், ஈரான் இத்தகைய முயற்சியில் ஈடுபடாது என நம்புவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இஸ்ரேல்–ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த அமெரிக்கா விரும்புவதாகத் தெரிவித்த டிரம்ப், அதற்கு ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பல முக்கிய பிரச்சினைகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரஷ்யா–உக்ரைன் விவகாரம்:

இதற்கிடையில், ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை மியாமியில் நேரில் சந்தித்ததன் மறுநாளே, அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் மீண்டும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக இந்த உரையாடல் இடம்பெற்றதாகவும், இதனை வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் நிலைமை தொடர்பாக இந்த உரையாடல் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

புதியது பழையவை