ஜப்பானில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, சுனாமி குறித்த எச்சரிக்கை வெளியிடப்பட்டதால் பொதுமக்கள் பெருமளவில் அச்சமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொக்காய்டோ மற்றும் டொஹோகு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு காரணமாக கட்டடங்கள் குலுங்கின, இதனால் பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வடக்கு ஜப்பானின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் சனே டகாய்ச்சி கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஜப்பானில் உள்ள 182 நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஒரு வார காலத்திற்கு மிகவும் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
