கடற்றொழிலாளர் உரிமைகள் மீறப்பட அனுமதிக்க மாட்டோம் - மன்னாரில் ஜனாதிபதி உறுதிமொழி

 


கடற்றொழிலாளர் சமூகத்தின் உரிமைகள் கைவிடப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். அத்துடன், நிலம் மற்றும் நீர்வளங்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் திடமான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார். மோசமான வானிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத சுமார் 12,000 கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன், மன்னாரில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தர திட்டத்தை முறையான ஆய்வுக்குப் பிறகு தொடர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, யோத வாவி நீர்ப்பாசனப் பகுதியில் சட்டவிரோதக் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராகச் சட்டத்தை செயல்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

அதேநேரம், அனர்த்தத்தால் வீடுகளை இழந்த 70 குடும்பங்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் காணியை அடையாளம் காண ஒரு குழுவை நியமித்தல், சேதமடைந்த கட்டமைப்பை சீரமைத்தல் உள்ளிட்டவற்றை விரைவாக வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காகத் திறைசேரியினால் வழங்கப்படும் ரூபா 15,000 ஐ கிராம உத்தியோகத்தர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பிரதேச செயலாளர்கள் மூலம் விரைவாக வழங்கி முடிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

புதியது பழையவை