வடமராட்சி கிழக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வேதனை

 


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்கள் கிராம அலுவலர் தொடர்பில் குறைபாடுகளை முன் வைத்துள்ளனர்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

''வெள்ளத்தால் நாங்கள் துன்புற்ற போதும் எங்களுக்கு எந்த விதமான நிவாரணத் தொகைகளும் தரப்படவில்லை. கேட்க நாதியற்றவர்களாக இருந்ததால் வேறு வழியின்றி ஊடகத்தை அழைக்க நேர்ந்தது. டிட்வா சூறாவளி இலங்கையை தாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் எமது இல்லங்களும் வெள்ளத்தால் நிரம்பி இருந்தன. உறவினர் வீட்டில் ஒரு சில குடும்பம் தங்கியிருந்தோம். எங்களுடைய வீடுகள் பலத்த காற்றால் சேதமடைந்த போதும் எமது வீட்டை கிராம அலுவலர் இதுவரை வந்து பார்வையிடவில்லை.

சேத விபரங்களை அறிக்கையில் பதிவுசெய்யவில்லை. நிரந்தர வீடு என்று கூறிச் சென்றார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். ஆனால் உண்மையில் பாதிப்புக்குள்ளான மக்களை அந்த நிவாரணம் போய்ச் சேர்வதைத் அரசு அதிகாரிகள் தடுத்து நிற்கின்றனர்.

பாதிக்காத மக்களுக்கு எமது பகுதியில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களை யாரும் கவனிக்கவில்லை. கிராம அலுவலர் கூட இதுவரை சந்திக்கவில்லை. காலில் காயமுற்று நடக்க இயலாதவர்களாக துன்பப்படுகின்றோம்.

அரசாங்கம் வழங்கும் நிவாரணத்தை வழங்க ஏன் அதிகாரிகள் தாமதிக்கின்றார்கள்? எந்த வீடாக இருந்தாலும் சரி, புயலால் சேதமடைந்த வீட்டை வந்து கிராம அலுவலர் பார்வையிட வேண்டுமல்லவா? அஸ்வெசும போன்ற திட்டங்கள் மூலம் பலர் பயன்பெற்று வருகிறார்கள். ஆனால் உண்மையில் வறுமைக்கோட்டில் துன்பப்படும் எங்களுக்கு எந்த விதமான திட்டங்களும் வழங்கப்படவில்லை. வெள்ள நிவாரணம் கூட கிடைக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அயலவர்களின் வீட்டில் வசிக்கும் எங்களை யாரும் வந்து நலம் விசாரிப்பதாகத் தெரியவில்லை.

ஒரு சிலரின் தூண்டுதலில் நாங்கள் அடிக்கடி புறக்கணிக்கப்படுகின்றோம். ஒரு சில கிராமத் தலைவர்களும் அரசு அலுவலர்களும் பாரபட்சம் காட்டி பாதிக்கப்பட்ட மக்களைக் கைவிட்டு இருப்பது வேதனை அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் போய்ச் சேர்ந்ததா என்பதை ஆய்வு செய்ய ஜனாதிபதி அவர்கள் சிறப்புக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நீண்ட காலமாக நாம் வீடு இல்லாமல் தற்காலிக வீட்டில் துன்பப்பட்டு வருகிறோம். அரசாங்கம் கொடுக்கும் வெள்ள நிவாரணத்தை கூட அதிகாரிகள் வழங்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஜனாதிபதி இது தொடர்பில் தனிப்பட்ட கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட எங்களுக்கு உதவிகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

மக்களின் வேண்டுதலின் பேரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வத்திராயன் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் ஊடகப் பணியாளர் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை