ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை மொத்தம் 84 நிபந்தனைகளை விதித்திருந்தது. அவற்றில், நெரிசல் ஏற்படாதவாறு உறுதியான தடுப்புகளை அமைப்பது, போதுமான குடிநீர் வழங்குவது, மருத்துவ உதவிகள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்வதற்கான வழிகளை ஒதுக்குவது, அத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கூட்டத்தை முடிப்பது ஆகியவை முக்கிய நிபந்தனைகளாகும்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, இக்கூட்டம் பற்றி பிபிசி தமிழிடம் பேசுகையில், "இருவர் மயங்கி விழுந்தது மற்றும் தடுப்பின் மீது ஏறி குதித்த ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது ஆகிய சிறு சம்பவங்களைத் தவிர, இந்தக் கூட்டம் சுமுகமாக நடந்து முடிந்தது" என்று தெரிவித்தார்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் பொதுக்கூட்டம்
கடந்த செப்டெம்பர் 27ஆம் தேதி கரூரில், தவெக தலைவர் விஜய் பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் ஏற்பட்ட அதிக கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் காரணமாக, தவெக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, விஜய் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர், தமிழக அரசின் மீது சில குறைபாடுகளை முன்வைத்திருந்தார்.
ஈரோட்டில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டம், கரூர் சோக நிகழ்வுக்குப் பிறகு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், காவல்துறை மிகவும் தீவிரமாக 84 நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பின்னரே கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கரூரில் 41 பேர் உயிரிழக்க, விஜய் பல மணி நேரம் தாமதமாக, இரவு நேரத்தில் 'ரோடு ஷோ'வுக்கு வந்ததும் ஒரு காரணம் என்று தமிழக அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதை மனதில் கொண்டு, ஈரோடு கூட்டத்தை காலை 11 மணியிலிருந்து மதியம் ஒரு மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அனுமதி ஆணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா விளக்கமளித்தார்.
பொதுக்கூட்ட ஏற்பாடுகள் எப்படி இருந்தன?
பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சுமார் 20 ஏக்கரில் செய்யப்பட்டு இருந்தபோதும், கார்கள் மற்றும் டூ வீலர்கள் நிறுத்த வெவ்வேறு பகுதிகளில் இடம் தயார் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து பொதுக்கூட்ட திடலுக்கு அரை கி.மீ. நடந்து வரும் வகையில் ஏற்பாடுகள் இருந்தன. பிரதான வாயில் உள்படப் பல திசைகளிலும் வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தவெக பொதுக்கூட்டம் பாதுகாப்பாக நடக்க காவல் துறை செய்த மாற்றங்கள் என்ன?
பொதுமக்கள் நின்று கூட்டத்தைப் பார்ப்பதற்கான இடம், மொத்தம் 72 'பப்ளிக் பாக்ஸ்' எனப்படும் 72 தடுப்புகளால் ஆன பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அதற்குள் தொண்டர்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர்.
பெண்கள் அனுமதிக்கப்பட்ட 'பப்ளிக் பாக்ஸ்'களில் ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று அப்பகுதிகளில் பெண் காவலர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஒவ்வொரு பப்ளிக் பாக்ஸ் பகுதியிலும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டு, தேவைப்படுவோர் எடுத்துக் குடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவை தவிர்த்து மக்கள் நடந்து வரும் வழிகளில் பல இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாகச் சில குடிநீர் லாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
விஜய் பரப்புரை பேருந்தில் நின்று பேசுவதைப் பார்க்கும் வகையில் ஆங்காங்கே எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் பொதுக்கூட்டம் நடந்தபோது கடுமையான வெயில் இருந்ததால் அவற்றில் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை இருந்தது.
இவற்றைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு கூட்டம் துவங்கி மதியம் 12:45 மணிக்குள் முடிவடைந்தது.
தவெக பொதுக்கூட்டம் பாதுகாப்பாக நடக்க காவல் துறை செய்த மாற்றங்கள் என்ன?
இருவர் மயக்கம், ஒருவர் காலில் காயம்
விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, இரு இளைஞர்கள் ஸ்பீக்கரின் மீது ஏறியிருந்தனர். அருகில் இருந்தவர்கள், நிர்வாகிகள், காவல் துறையினர் கூறியும் அவர்கள் இறங்க மறுத்துவிட்டனர்.
அதைப் பார்த்த விஜய், ''தம்பி! உடனே கீழே இறங்குப்பா... நீ கீழே இறங்கு நான் முத்தம் கொடுக்கிறேன்!'' என்று கூறியதும் அவர்கள் இருவரும் இறங்கிவிட்டனர். இதேபோன்று தடுப்பில் ஏறிக் குதித்த ஓர் இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
பொதுக்கூட்டம் நடக்கும் விஜயமங்கலம் பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில், கோவையில் இருந்து வந்த விஜயை காண மக்கள் திரண்டிருந்தனர். அவர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் கனமான கயிறுகளை வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
ஏற்கெனவே குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் யாரும் பொதுக் கூட்டத்திற்கு வரவேண்டாமென்று தலைமை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்ததால், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை பார்ப்பது அரிதாக இருந்தது.
