யாழ்ப்பாணத்தில், படிக்குமாறு தாயார் வற்புறுத்தியதால் மனமுடைந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து விரிவான தகவல் வருமாறு:
மாணவியின் தாயார், அவரை தொடர்ந்து படிக்குமாறு வலியுறுத்தி வந்ததால், மாணவி மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளார். கடந்த 12ஆம் திகதி, வழமைபோல தாயார் படிக்குமாறு கூறியதால், அந்த மாணவி ஆத்திரமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, குப்பைகளை எரிப்பதுபோல் நடித்து, பெற்றோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதன்போது, சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது, தான் செய்த தவறை மாணவி அவர்களிடம் தெரிவித்துள்ளார். தீக்காயங்களுடன் காணப்பட்ட மாணவி உடனடியாக மந்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும், வைத்தியசாலையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி, மாணவி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.