புதுடில்லி: இந்திய அணியின் மூத்த வீரரான ரோகித் சர்மா, தனது ஓய்வு குறித்து சூசகமாகப் பேசியுள்ளார். "விமானத்தை விரைவாகத் தரையிறக்க நான் விரும்பவில்லை. தொடர்ந்து உயரே பறக்கவே விரும்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.
இந்திய அணியின் 'சீனியர்' பேட்டரான ரோகித் சர்மாவுக்கு இப்போது 38 வயது. அவரது தலைமையின் கீழ் 2023 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை (50 ஓவர்) தொடரில் இந்திய அணி தொடர்ந்து 10 வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஆமதாபாத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை இழந்தது. இந்தக் கசப்பான தோல்வியிலிருந்து மீண்டெழுந்த அவர், பிறகு 2024 இல் 'டி-20' உலகக் கோப்பையையும், 2025 இல் சாம்பியன்ஸ் டிராபியையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.
உலகின் 'நம்பர்-1' வீரர்
டெஸ்ட் மற்றும் 'டி-20' கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோகித், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வருகிறார். அவரிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்ட போதிலும், 2025 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 14 ஒருநாள் போட்டிகளில் 650 ரன்கள் குவித்து, உலகின் 'நம்பர்-1' பேட்டராகத் திகழ்கிறார்.
அடுத்து நடைபெறவிருக்கும் உள்ளூர் விஜய் ஹசாரே தொடரிலும், நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் அவர் பங்கேற்க உள்ளார். 2027 இல் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை (50 ஓவர்) தொடரில் விளையாடவும் அவர் ஆர்வமாக இருக்கிறார்.
தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என்பதை, விமானம் பறக்கும் உயரத்தை உதாரணமாகக் கூறி ரோகித் சர்மா பேசியுள்ளார். குருகிராமில் நடந்த கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் அவர் ஆற்றிய உரை பின்வருமாறு:
விமானம் 'டேக் ஆப்' (வானில் எழும்) செய்யும் ஆரம்ப நேரத்தில் சற்று சிரமம் இருக்கத்தான் செய்யும். ஆனால், 35,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும் போது, நிதானமான சூழல் நிலவும். பயணிகள் ஆசுவாசமாக இருப்பார்கள். சிலர் உணவு உண்பார்கள். சிலர் உறங்குவார்கள்.
அதேபோலத்தான், எனது கிரிக்கெட் வாழ்க்கையும் ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. இப்போது, அது உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. விமானத்தைத் தரையிறக்குவதும் முக்கியம். எப்போது தரையிறங்குவது என்பது ஒவ்வொருவரின் முடிவைப் பொறுத்தது. இப்போதைக்கு விமானத்தைத் தரையிறக்க நான் விரும்பவில்லை. தொடர்ந்து உச்சத்தில் பறக்கவே விரும்புகிறேன்.
தோல்வியின் பாடம்
கடந்த 2022 இல் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டபோது, உலகக் கோப்பையை வெல்வதே தனக்கு முக்கிய இலக்காக இருந்ததாக ரோகித் தெரிவித்தார்.
2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டித் தோல்விக்குப் பிறகு மனம் உடைந்து போனேன். அந்தத் தொடர் என்னிடமிருந்து அனைத்து சக்தியையும் உறிஞ்சிவிட்டது. என்னிடம் எதுவும் இல்லை என உணர்ந்தேன். ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டே வேண்டாம்; ஓய்வு பெற்றுவிடலாம் என்றுகூட தோன்றியது.
இந்த சோகமான மனநிலையில் இருந்து மீண்டு வர எனக்கு 2 மாதங்கள் தேவைப்பட்டன. நான் நேசிக்கும் விளையாட்டுக்குத் திரும்ப வேண்டும் என அடிக்கடி எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை என்று நினைத்தேன். அந்தத் தோல்வி எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. அதன் பிறகுதான், 'டி-20' உலகக் கோப்பை (2024) தொடரில் முழு கவனம் செலுத்திச் சாதித்தேன்.