நிவாரணப் பட்டியலில் தோட்ட மக்கள்: பாதுகாப்பு அமைச்சின் புதிய சுற்றுநிருபம் வெளியீடு

 


தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் குடியிருப்புகளை இழந்தவர்களுக்கான அரச நிவாரணங்களைப் பெறக்கூடியவர்களின் பட்டியலில், பெருந்தோட்ட வீடுகளில் வசிப்பவர்களையும் உள்ளடக்கி பாதுகாப்பு அமைச்சு புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2025.12.14 ஆம் திகதியிடப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் இந்த புதிய சுற்றுநிருபத்தில், தித்வா இயற்கை அனர்த்தத்தில் குடியிருப்புகளை இழந்தவர்களுக்கான அரச நிவாரணங்களைப் பெற தகுதியானோர் தொடர்பில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபத்தில் அந்த விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

முன்னைய சுற்றுநிருபங்களில் இடம்பெறாத வகையில், இம்முறை பெருந்தோட்ட வீடுகளில் வசிப்பவர்களும் நிவாரணத்திற்கு தகுதியானவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 21 முதல் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பகுதியளவில் அல்லது முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி பின்வரும் தொகைகளை ஒரே தடவையில் வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்:

பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்கு: 25,000

வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு: 50,000

மொத்த கொடுப்பனவு: 75,000

புதிய சுற்றுநிருபத்தின் தெளிவுரை

இந்தக் கொடுப்பனவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றுநிருபத்தில், 1.2 பிரிவில் 'நிலவுரிமை' (Land Ownership) என்ற அத்தியாயத்தின் கீழ் பின்வருமாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது:

நில உரிமை மற்றும் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் இந்த உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். பேரிடரால் பாதிக்கப்பட்ட நிரந்தர வீட்டு உரிமையாளர்கள், பெருந்தோட்ட வீடுகளில் வசிப்பவர்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், அங்கீகரிக்கப்படாத வீடுகளில் வசிப்பவர்கள், அரசு அலுவலக வீடுகள், அரசு பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குடியிருப்பு மையங்கள் ஆகியோருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்."

நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கை

முன்னதாக, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2025.12.05 ஆம் திகதியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் 'அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்' என்ற பதம் இருந்தாலும், அதன் 6ஆம் பிரிவில் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டல்களுக்காகப் பாதுகாப்பு அமைச்சின் முன்னைய சுற்றறிக்கையைப் பின்பற்றும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் முந்தைய சுற்றுநிருபத்தின் படி (2020 ஆம் ஆண்டு முதல் செயற்பாட்டில் உள்ள), தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 மட்டுமே கிடைக்கும் நிலைமை இருந்தது. இந்த நிலைமை தொடர்பில் கடந்த 9ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இதுகுறித்து எடுத்துரைத்திருந்தார். இதன் பின்னரே இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை