இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
அயல் நாடுகளுடனான உறவுகளுக்கு முன்னுரிமை” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட கடும் பேரழிவை எதிர்கொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘ஒப்பரேஷன் சாகர் பந்து’ திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த விஜயம் நடைபெறுகிறது என அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 27ஆம் திகதி இலங்கையை தாக்கிய ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக 600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, இந்தியா ‘ஒப்பரேஷன் சாகர் பந்து’ நடவடிக்கையை ஆரம்பித்து, உடனடி ஆதரவாக மனிதாபிமான உதவிகள், அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலங்கைக்கு வழங்கி வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின் போது, அனர்த்தத்துக்குப் பின்னரான மீளமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள், இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகள், பொருளாதார கூட்டாண்மை மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.