2011ஆம் ஆண்டு புகுஷிமா (Fukushima) அணு விபத்துக்குப் பின்னர், அணுசக்தி பயன்பாட்டில் எச்சரிக்கையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்த ஜப்பான், தற்போது மீண்டும் அணுசக்தி நோக்கி நகரும் ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுத்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமாகக் கருதப்படும் ‘காஷிவாஸாகி–கரிவா’ (Kashiwazaki-Kariwa) அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கான இறுதி ஒப்புதலை நிகாட்டா (Niigata) மாகாண சபை இன்று வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புகுஷிமா அணு விபத்துக்கு காரணமான அதே ‘டெப்கோ’ (TEPCO) நிறுவனமே இந்த அணு நிலையத்தை மீண்டும் இயக்கவுள்ளதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே கவலை மற்றும் சுமார் 60 சதவீதம் வரை எதிர்ப்பு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் எரிபொருட்களுக்கான செலவுகளை குறைப்பதற்கும், வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களின் அதிகரிக்கும் மின் தேவையை நிறைவேற்றுவதற்கும் அணுசக்தி அவசியம் என ஜப்பான் அரசு கருதுகிறது.
இதனடிப்படையில், 2040ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 20 சதவீதத்தை அணுசக்தி மூலம் ஈடுசெய்ய வேண்டும் என்ற இலக்கை பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) தலைமையிலான அரசு நிர்ணயித்துள்ளது.