அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக, விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று இன்று (22) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த அனர்த்த மேலாண்மை தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், வெள்ள அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றை மீளச் சீரமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இணையவழி (நேரலை) மூலம் கலந்து கொண்டார்.
மேலும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், உபாலி சமரசிங்க, செல்லதனதம்பி திலகநாதன், செல்வம் அடைக்கலநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேன், வடக்கு மாகாண திணைக்களங்களின் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட மட்ட அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
