கிறிஸ்மஸ் தினமான இன்று, வவுனியா நகரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அண்மையில் கூடிய அவர்கள், இந்த கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு சர்வதேச சமூகத்துக்கொரு செய்தியை எடுத்துச் செல்லும் நோக்கில் அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது, வடக்கு–கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த கிறிஸ்துமஸ் தினத்தில், அனைத்து தமிழர்களிடமும் பணிவுடனும் தெளிவுடனும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். எமது மண்ணில் நிலவி வந்த உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். அதனை எமது இளம் தலைமுறைக்கும் கற்பிக்க வேண்டியது அவசியம் என்றார்.
சிங்கள இன அடையாளம் உருவாகும் காலத்திற்கு முன்னரே, இந்தத் தீவில் தமிழர்கள் வாழ்ந்திருந்தனர். இத்தீவு, தமிழ்நாட்டுடன் இணைந்த பரந்த தமிழ் நாகரிகப் பரப்பின் ஒரு அங்கமாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.
சங்ககாலம் முதல், சைவத் தமிழர்களும் தமிழ் புத்தர்களும் இந்தத் தீவின் நாகரிக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். தமிழ் புத்தமதம் ஒரு இன அடையாளமல்ல; அது ஒரு தமிழ் பண்பாட்டு மற்றும் ஆன்மீக மரபாகும். பின்னாளில், மத நிறுவனங்களில் ஏற்பட்ட சீர்கேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகளால் பல தமிழ் புத்தர்கள் மீண்டும் சைவத்தை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், வட இந்திய வணிகர்கள், இயக்கர் மற்றும் நாகர் குழுக்கள், மேலும் சில தென்னிந்திய வணிகக் குழுக்கள் இணைந்ததன் விளைவாக, சிங்கள புத்த அடையாளமும் சிங்கள மொழியும் உருவானதாக வரலாற்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன என்றார்.
இன்றைய தமிழ் தாயகப் பகுதிகளில் காணப்படும் எந்த புத்தச் சின்னங்களும் சிங்கள புத்தமதத்தின் உருவாக்கமல்ல. அவை அனைத்தும் பண்டைய தமிழ் புத்த மரபின் எஞ்சிய சாட்சிகளாகும். கந்தரோடை சிறிய விகாரை இதற்கான தெளிவான உதாரணம் எனவும் அவர் கூறினார்.
போர்த்துகீசியர்கள் வருகை தரும்வரை, இந்தத் தீவின் வடகிழக்குப் பகுதிகள் தமிழர் அரசர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. சங்கிலியன் மன்னனின் ஆட்சி இதற்கான வரலாற்றுச் சான்றாகும். வரலாற்றிலும் சட்டரீதியாகவும் இந்த நிலம் தமிழர்களுக்கே உரியது என அவர் வலியுறுத்தினார்.
வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் குடும்பத்தினர், A-9 நெடுஞ்சாலையில் வவுனியா நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள வன்னி பந்தலில் தொடர்ந்து அமைதியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 2025 டிசம்பர் 25 ஆம் திகதியான கிறிஸ்துமஸ் தினத்துடன், இந்தப் போராட்டம் 3,231 நாட்களை எட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எங்கள் குரல், எங்கள் அன்புப் பிள்ளைகள் மீண்டும் எங்களிடம் திரும்பி வர வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; எதிர்காலத்தில் எந்த தமிழ் குழந்தையும் இத்தகைய துயரத்தை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவும் என்றார்.
நாங்கள் தினமும் துக்கத்தோடு மட்டுமல்ல, உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஒன்றுகூடுகிறோம். நீதி கோருவதற்காகவும், தமிழ் இறையாண்மைக்கு சர்வதேச ஆதரவை நாடுவதற்காகவும், எதிர்கால இன அழிப்பு மற்றும் அழிவுகளிலிருந்து எமது மக்களை பாதுகாப்பதற்காகவும் நாங்கள் இங்கு நிற்கிறோம் என்றார்.
இந்தக் கிறிஸ்துமஸ் தினத்தில், தெளிவாக கூறுகிறோம். எங்களுக்கு 13வது திருத்தச் சட்டம் வேண்டாம். எங்களுக்கு கூட்டாட்சி அல்லது மேலோட்ட அரசியல் தீர்வுகள் வேண்டாம். எங்களுக்கு தேவையானது தமிழ் இறையாண்மையின் மீட்பு என அவர் தெரிவித்தார்.
எமது வரலாற்றை எமது பிள்ளைகளுக்குக் கற்பிப்போம். சட்டப்பூர்வமான மற்றும் நியாயமான வழிகளில் நீதி தேடுவோம். எமது நிலத்தை அதன் உண்மையான உரிமையாளர்களான தமிழர்களிடம் மீண்டும் கொண்டு வருவோம்.
உண்மை அழிக்கப்படக் கூடாது. நீதி தாமதிக்கப்படக் கூடாது. தமிழ் தாயகம் மறுக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.