ரஷ்யா–உக்ரைன் போர் தொடரும் பின்னணியில், கிறிஸ்துமஸ் தின நிகழ்வில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசியதாவது:
ரஷ்யா தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டு வந்தாலும், உக்ரைன் மக்கள் பண்டிகைக் காலத்தில் நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் நிற்கிறார்கள். ரஷ்யாவால் முக்கியமான இடங்களை கைப்பற்றவும், எங்கள் உற்சாகத்தை சிதைக்கவும் முடியவில்லை. இன்றைய தினம், நாம் அனைவரும் ஒரே கனவையும் ஒரே எதிர்பார்ப்பையும் பகிர்ந்து கொள்கிறோம் என்றார்.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பல எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் கடவுளிடம் நாம் கேட்பது ஒன்றே – உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதிக்காக நாம் போராடுகிறோம், அதற்காக ஜெபிக்கிறோம். குடும்பங்கள் ஒன்றாகக் கூடும் இந்த தருணம் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதல்களை நிறுத்தும் நோக்கில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்த முன்மொழிவில் பெரும்பாலான விடயங்களை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் உக்ரைன் இணக்கம் தெரிவித்த அந்த ஒப்பந்தம் தற்போது ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவில் ஜெலன்ஸ்கி வெளியிட்ட கடும் கருத்துகள், போர் நீடிக்குமா அல்லது அமைதி முயற்சிகள் வெற்றியடையுமா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன.
