காலை உணவாக பிட்டு சமைத்துத் தருமாறு கேட்ட கணவனை, அவரது மனைவியே வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இன்று (15) மட்டக்களப்பு, வாகனேரியில் பதிவாகியுள்ளது.
வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய, நான்கு பிள்ளைகளின் தந்தையே இந்தச் சம்பவத்தில் பலியானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. உயிரிழந்த நபர் வழமைபோல விவசாய நடவடிக்கைகளுக்காக நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி, இன்று காலையில் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், அவர் தனது மனைவியிடம் காலை உணவாக பிட்டு தயாரித்துத் தருமாறு கேட்டுள்ளார். அதன் பின்னர், கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
அந்த வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், முற்பகல் 11.30 மணியளவில் மனைவி, பிட்டு கேட்ட கணவனை ஆயுதம் ஒன்றினால் கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்தார். அங்கு தாம் கணவனைக் கொலை செய்ததாக அவர் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக தடயவியல் பிரிவுப் பொலிஸார் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். சடலத்தை பொலிஸார் மீட்டெடுத்ததுடன், அதனை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
