பருத்தித்துறைப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர்ப்புறத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவு கையாளும் இடங்கள் ஆகியவற்றில், பருத்தித்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் இணைந்து பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சட்ட நடவடிக்கை
இந்தப் பரிசோதனையின்போது, சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கிய ஆறு உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக, பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (2025.12.19, வெள்ளிக்கிழமை) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், அவர்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
