பல்கலைக்கழகங்களில் துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகள் நியமனம் தொடர்பாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் முறையற்றவை எனக் குற்றம் சாட்டி, வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, வவுனியா பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் பி. தர்மதா, பல்கலைக்கழகங்களின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்கலை மானியங்கள் ஆணைக்குழு தலையீடு மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக சட்டத் திருத்தப் பிரேரணை ஒன்றை பல்கலை மானியங்கள் ஆணைக்குழு பாராளுமன்றில் முன்மொழிந்ததன் பின்னர், கடந்த டிசம்பர் 3ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கடிதமொன்று அனுப்பப்பட்டதாக கூறினார்.
அக்கடிதத்தில், துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகள் நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மறு அறிவித்தல் வரை உடனடியாக இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது அரச பல்கலைக்கழகங்களின் சுயாதீன நிர்வாகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தலையீடு என பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும், அந்தக் கடிதத்தை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், பல்கலை மானியங்கள் ஆணைக்குழு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் கடந்த டிசம்பர் 18ஆம் திகதி மற்றொரு பதில் கடிதத்தை அனுப்பியதாகவும், அதனால் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்தவொரு சாதகமான தீர்வும் எட்டப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையைத் தொடர்ந்து, பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அந்தக் கடிதங்களை மீளப்பெற வலியுறுத்தி, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்ததாக அவர் கூறினார்.
அதன் ஒரு பகுதியாக, வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் இப்போராட்டத்தில் பங்கேற்று முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் பி. தர்மதா தெரிவித்தார்.
